திருநெல்வேலி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் ஏஎல்எஸ்.லட்சுமணன். இவர் தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் திருநெல்வேலி தொகுதியில் திமுக வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களாக லட்சுமணன் திருநெல்வேலி தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று அவர் திருநெல்வேலி தொகுதிக்குட்பட்ட மானூர் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, காவலர்கள் தனது பரப்புரைக்கு இடையூறு செய்வதாகக் கூறி திடீரென வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் தனது ஆதரவாளர்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விசாரித்தபோது, அனைத்து வேட்பாளர்களும் பரப்புரை செய்யும் இடங்கள் குறித்த பட்டியலை காவல் துறையிடம் வழங்குவது வழக்கம். ஆனால் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் தான் செல்லும் இடங்கள் குறித்த பட்டியலை காவல் துறையினருக்கு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக காவல் துறையினர் கேட்டபோது, ”நான் தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளேன். நான் எங்கே செல்கிறேன் என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியுள்ளார். அதற்கு காவல் துறையினர் கட்டாயம் பட்டியலைத் தர வேண்டும் என்று வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
எனவே காவல் துறையின் நடவடிக்கையைக் கண்டித்து திமுக வேட்பாளர் லட்சுமணன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து தகவலறிந்து அங்கு வந்த காவலர்கள், வேட்பாளர் லட்சுமணனிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் காவலர்கள் தனது பிரச்சாரத்திற்கு இடையூறு செய்வதாக க்கூறி சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் 2 மலைவாழ் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு