நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். கடம்போடுவாழ்வு என்ற கிராமத்தில் திண்ணைப் பரப்புரையில் அவர் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "பெண்களின் முன்னேற்றத்திற்கு ஏராளமான திட்டங்களை தந்தது திமுகதான். சொத்தில் சம உரிமை, பெண்களுக்கு திருமண உதவித்தொகை, விதவைகள் மறுவாழ்வு உதவித்தொகை, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு என அடுக்கடுக்கான திட்டங்கள் தந்துள்ளோம்.
பெண்கள் முன்னேற்றத்திற்காக திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழு தொடங்கப்பட்டது. சிறு குறு தொழில் தொடங்க ஏராளமான நிதி உதவி வழங்கப்பட்டது. எட்டாண்டு கால அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் எதுவும் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு உங்களின் குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படும்" என்றார்.