நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அப்பாவு. ராதாபுரம் தொகுதியின் முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினரான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகனின் திருமண விழா கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. பின்பு இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி பணகுடி மெயின் ரோட்டில் உள்ள ஜான் தாமஸ் என்ற திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் கலந்து கொள்பவர்களை வரவேற்கும் விதமாக திருமண மண்டபத்திற்கு முன்பு இரண்டு பக்கங்களிலும் இரண்டு டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்ட காவல் துறையினர் அனுமதி பெறாமல் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டதாகவும், அதனை உடனடியாக அகற்றும்படியும் அங்கு இருந்தவர்களிடம் கூறினர். இருப்பினும் இரவு வரை அந்த பேனர்கள் அங்கிருந்து அகற்றப்படவில்லை.
ஆகையால் பணகுடி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அப்பாவு மீது அனுமதி பெறாமல் டிஜிட்டல் பேனர் வைத்ததாக பணகுடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து திருமண வரவேற்பு நடைபெற்ற மண்டபத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த இரண்டு பேனர்களையும் காவல் துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி காவல் நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.
கடந்த மாதம் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் லாரி மோதி சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து திமுக சார்பாக தங்கள் கட்சியினர் சார்பில் இனி கட் அவுட் மற்றும் பேனர்கள் வைக்கமாட்டார்கள் என்று உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இப்போது திமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவு அவரது மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தின் இரு பக்கங்களிலும் பேனர் வைத்தது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'வாரிசு அரசியலால் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்!'