திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ். இவரது முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில் இரண்டாவதாக நாகப்பட்டினம் பீச் ரோடு பகுதியைச் சேர்ந்த சுஜா என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். சுஜாவுக்கும் ஏற்கனவே திருமணமாகி முதல் கணவர் மூலம் மகேஸ்வரி (10) உள்பட மூன்று குழந்தைகள் உள்ளனர்.
தற்போது குழந்தைகள் மூவரும் சுஜா மற்றும் அந்தோணிராஜுடன் வசித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அந்தோணி ராஜ் மற்றும் சுஜா வேலை பார்த்து வருகின்றனர். அவர்களது குழந்தை அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மகேஸ்வரி காவல்கிணற்றில் உள்ள பிரபல பேக்கரி கடையில் பணம் கொடுக்காமல் தின்பண்டம் எடுத்து வந்துள்ளதாக அந்தோணிராஜுடம் கடையிலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தோணிராஜ் வீட்டிற்குச் சென்று மகேஸ்வரி உள்பட சுஜாவின் மூன்று குழந்தைகள் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துள்ளார். மகேஸ்வரியைத் தவிர இரண்டு பேரும் தப்பி ஓடிய நிலையில் மகேஸ்வரி உடல் முழுவதும் தீப்பிடித்து இதனால் அவர் அலறித் துடித்துள்ளார்.
மகேஸ்வரி தன்னை காப்பாற்றும்படி தந்தை அந்தோணிராஜை கட்டிப் பிடித்துள்ளார். இதனிடையே சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மகேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் அந்தோணிராஜுக்கும் காயம் ஏற்பட்டது. அவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மகேஸ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பணகுடி போலீசார் கொலை முயற்சி (இபிகோ 307- கொலை முயற்சி) வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிக்கு 95 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டிருப்பதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
தின்பண்டம் எடுத்து வந்த காரணத்துக்காகச் சிறுமி என்று கூட பாராமல் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியினரிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், அந்தோணிராஜ் இதே போன்று அடிக்கடி சுஜாதாவின் மூன்று குழந்தைகளையும் அடித்து சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தனியார் சிமென்ட் நிறுவனத்தின் மீது நடிகை சினேகா மோசடி புகார்!