திருநெல்வேலி: வண்ணார்பேட்டையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் ஹோட்டல் நிறுவனம் புத்தாண்டு, தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா, கிறித்துமஸ் தீபாவளி என அனைத்து விழாக்காலங்களிலும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலும் அந்த விழாவின் சிறப்பு அம்சங்களை எடுத்துக் கூறும் வகையில் உணவுகள், இனிப்பு வகைகள் ஆகியவற்றைச் செய்து விழா நடத்துவது வழக்கம்.
இந்நிலையில், தற்போது தீபாவளிப் பண்டிகை வரும் 24ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் பொதுமக்கள் பட்டாசு, இனிப்புகள், புத்தாடைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த தீபாவளிப் பண்டிகையில் பொதுமக்கள், சிறு குழந்தைகளை கவரும் வகையில் வண்ணாரப்பேட்டையில் உள்ள பிரபல ஹோட்டல் நிறுவனம் பட்டாசு வடிவில் சாக்லேட்டுகளை தத்துரூபமாக தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளது.
இதில் சரவெடி, லட்சுமி வெடி, புஷ்வானம் , சங்கு சக்கரம், அணுகுண்டு மத்தாப்பு என 11 வகையான பட்டாசு வகைகளைப் பயன்படுத்தி சாக்லேட்டை வடிவமைத்துள்ளனர். இவைகள் 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கிப்ட் பாக்ஸாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பட்டாசு போன்று சாக்லேட் வடிவமைக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் பெரியவர்களை விட பட்டாசு மீது அதிகம் விரும்பம் கொண்ட இளையோர்கள், சிறு குழந்தைகளை இந்த பட்டாசு சாக்லேட்டுகள் வெகுவாக கவர்ந்துள்ளது.
இது குறித்து, சாக்லெட்டை தயாரித்த உணவு கலை நிபுணர்கள் கூறுகையில், “தீபாவளிப் பண்டிகையில் பட்டாசு முக்கியத்துவம் பெறுவதுடன் அனைவரும் விரும்புவதால் பட்டாசை மையமாக வைத்து இந்த சாக்லேட்டை சிறப்பாகத் தயாரித்துள்ளோம். மக்களின் பார்வையைக் கவரும் விதமாகவும், அவர்களின் சுவைக்கு தகுந்தார்போல் செய்துள்ளோம். தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாள்களே உள்ள நிலையில் பட்டாசு சாக்லேட் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பட்டாசுகளுக்கு தடை: சிவகாசியில் 1.5 லட்சம் பேர் வேலையின்றி தவிப்பு