திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்ப மனு பெறப்பட்டுவருகிறது. இதனிடையே, காங்கிரஸ் கட்சி நாங்குநேரி தொகுதியில் உள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர்களை களமிறக்க வேண்டும் என அத்தொகுதியின் காங்கிரஸ் தொண்டர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனால், வேட்பாளர் நேர்காணலில் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் விருப்ப மனுவினை வாங்கினார்.
இந்நிலையில், நாங்குநேரி தொகுதியில் 25 கோடி ரூபாய் செலவு செய்பவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்று தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழச்செல்வன் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை வாங்க வந்திருந்தார்.
அப்போது அவர் கூறுகையில், சொந்தத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களை தலைமை அறிவிக்க வேண்டும் என தொண்டர்கள் வைத்த கோரிக்கையை தலைமை நிர்வாகம் நிராகரித்துவிட்டது. இதற்கு பதிலாக பணம் செல்வாக்கு படைத்தவர்களை போட்டியிட வைப்பதாக முடிவெடுத்திருப்பது கண்டனத்திற்குறியது. இந்த நிலை நீடித்தால் காங்கிரஸ் தொண்டர்கள் தனித்துவமாக சுயேட்சையாக களம் இறங்குவார்கள் என்றார்.