திருநெல்வேலி: நெல்லை நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாடு இன்று (நவம்பர். 25) திசையின்விளையில் நடந்து வருகிறது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
முன்னதாக இந்த மாநாட்டில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முழுவதுமாக புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைக் கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் இன்று (நவ. 25) நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து 50க்கும் மேற்பட்ட மகளிர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நாங்குநேரி வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அம்புரோஸ் என்பவர், கே.எஸ்.அழகிரி திசையின்விளை கூட்டத்திற்கு வரும்பொழுது வெடிகுண்டு வெடிக்கும் என தனது வாட்ஸ் அப்பில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அன்புரோஸ் மீது நாங்குநேரி வட்டார காங்கிரஸ் தலைவர் முத்துகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மூன்றடைப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் நெல்லை காங்கிரஸ் வட்டாரத்தில் ஒரு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. ஏற்கனவே நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் உட்பூசல் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனின் ஆதரவாளர்களும், மாநில தலைவரின் ஆதரவாளர்களும் கடுமையாக மோதிக் கொண்ட சம்பவம் அரங்கேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரேபிஸ் தடுப்பூசி எந்த அளவுக்கு நம்பகத் தன்மை உடையது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?