திருநெல்வேலி: தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா நேற்று (மே.11) திடீரென நாகர்கோவில் தனியார் மருததுவமனையில் வைத்து மாரடைப்பால் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அடுத்த வேப்பிலான்குளம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.
தற்போது, நெல்லை சிவாவின் உடலுக்கு ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த நடிகர் நெல்லை சிவா 1985ஆம் ஆண்டு வெளியான 'ஆண்பாவம்' திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு முன்னணி கதாநாயகர்களுடன் நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, நடிகர் வடிவேலு உடன் இணைந்து நடித்த 'கிணத்தை காணோம்' என்ற நகைச்சுவைக் காட்சிபட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.
சென்னையில் வசித்து வந்த நெல்லை சிவா சில தினங்களுக்கு முன்தான் ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் சென்றார். திடீரென இவர் உயிரிழந்த சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரது உடல் இன்று (மே.12) பிற்பகல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் சிவாவின் இறுதி ஊர்வலத்தில் திரைத்துரையினர் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மிகவும் எளிமையாக வாழ்ந்து வந்த சிவா தோற்றத்தில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் எளிமையாகவே வாழ்ந்துள்ளார்.
இதையும் படிங்க: இறந்தவரின் பரிந்துரைச் சீட்டைப் பயன்படுத்தி ரெம்டெசிவிர் வாங்க முயற்சி - 3 பேர் கைது