திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த இசக்கிமுத்து என்பவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நான்கு லட்சம் ரூபாய் நிதி வழங்க சட்டப்பரவை சபாநாயகர் அப்பாவு நேரில் சென்றிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பந்தமாக ஆளுநர் ஆர் என் ரவி எந்த ஆதாரங்களுடன் கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார் என்பது தெரியவில்லை.
நானும் ஆளுநரும் பொதுவான நபர்கள். ஆளுநர் தடயங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக பொதுவெளியில் கருத்துக்களை வெளியிட்டு இருக்க வேண்டாம். அதனை தவிர்த்து இருக்கலாம். தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் இருந்தால் ஆளுநர் தமிழ்நாடு அரசிடம் தெரிவித்து அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருக்கலாம்.
ஏற்கனவே கோயமுத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தமிழ்நாடு அரசு விரைவாக செயல்பட்டு இருப்பதாக ஆளுநர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கார் வெடிப்பில் இறந்த முபின் கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது ஆலயத்தில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பந்தமாக திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவரை சந்தித்ததாகவும், தேசிய புலனாய்வு முகமை அவரை விசாரித்து அதன் பின் விட்டு விட்டார்கள் என்றும் பாரதிய ஜனதா கட்சியும் தேசிய புலனய்வு முகமையும் இணைந்து தான் முபினுக்கு பயிற்சி கொடுத்ததாகவும் கூட உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி கொண்டே தான் இருக்கிறது .
அதேபோல் தான் ஆளுநரின் கருத்தும் இருப்பதாக நான் கருதுகிறேன் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’மனிதத்தின் மாபெரும் அச்சுறுத்தல் தான் பயங்கரவாதம்...!’ - ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர்