களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் வனச்சரக பகுதியில் உள்ள மணிமுத்தாறு பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை நுழைந்து ஆடுகளை கொன்றுவந்தது.
இதனையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி அம்பாசமுத்திரம் வனச்சரகர் கார்த்திகேயன் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக குண்டு வைக்கப்பட்ட நிலையில் இன்று காலை இரண்டரை வயது பெண் சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கியது.
கூண்டில் சிறுத்தை சிக்கிய தகவல் அறிந்ததும் மணிமுத்தாறு மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள பொதுமக்கள் சிறுத்தையை வேடிக்கை பார்க்க கூடினர். சிறுத்தை சிக்கியதை அடுத்து வனத்துறையினர் சிறுத்தையை வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
இதே பகுதியில் நேற்று முன்தினம் இரவு, குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடியை சுமார் 9 மணி நேர போராட்டத்திற்கு பின் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
மலையடிவார பகுதியில் உள்ள மணிமுத்தாறில் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் தொடர்ந்து நுழைந்து வருவதால் அச்சத்திலேயே வாழவேண்டியுள்ளதாகவும், வனவிலங்குகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.