திருநெல்வேலி: மேலப்பாளையம் ஆண்டவர் தெருவில் மந்திரமூர்த்தி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வாசலில் விநாயகர் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு அப்பகுதி மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த கோயிலில் நாளைய தினம் வருஷாபிஷேகம் மற்றும் கொடை விழா நடைபெற இருப்பதால் அதற்கான பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அதிகாலையில் மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை அறிந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கோயில் வாசலில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை கம்பியால் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். காலையில் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் விநாயகர் சிலை உடைக்கப்பட்டதை அறிந்து மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் உடனடியாக சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். புதிய விநாயகர் சிலையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோயிலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் ஸ்ரீனிவாசன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பாளையங்கோட்டை தாசில்தார் ஆவுடையப்பன், புதிய சிலை வைப்பதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
சிலை உடைப்பு மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தின் காரணமாக 30-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சிலை உடைப்பு தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். கோயிலில் புதிய சிலையை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை