திருநெல்வேலி: மேலப்பாளையத்தை அடுத்த கரீம் நகரில் தனியாருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் வற்றாத நீருடன் மிகப்பெரிய கிணறும் ஒன்றும் அமைந்துள்ளது. அந்த தோட்டத்தைக் கிருஷ்ணன் என்பவர் பராமரித்து வருகிறார்.
இந்நிலையில் கரீம் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த முகமது அசன் என்பவரது மகன் முகமது அசர் (15). இவர் நண்பரான கிருஷ்ணனின் மகன் தேவராஜோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது பால் கிணற்றில் விழுந்ததைத் தொடர்ந்து, அதனை எடுக்க 4 பேரும் தண்ணீரில் குதித்துள்ளனர். இதில் திடீரென முகமது அப்சர் மட்டும் நீரில் மூழ்கிய நிலையில், மற்ற 3 சிறுவர்களும் கிணற்றிலிருந்து வெளியே வந்து அக்கம் பக்கத்தினரிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் காவல்துறையினர் மாநகராட்சி அதிகாரிகள் கிணற்றிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியே எடுத்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. சிறுவனுக்கு என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள அப்பகுதி மக்களும் அங்கு கூட்டமாகத் திரண்டனர். இந்த நிலையில் சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சிறுவன் முகமது அசர் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தோட்ட உரிமையாளர் மற்றும் காவலாளியிடம் மேலப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணறு தோண்டியதில் ஏதேனும் முறைகேடுகள் இருக்கும் பட்சத்தில் தோட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் தோட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவி அரசு வழங்க வேண்டுமென எஸ்டிபிஐ கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.