திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில், விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பீடி தொழில்தான் பிரதானம். ஆனால், குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு திருநெல்வேலியிலும், தென்காசியிலும்தான் அதிகம் பீடி உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயத்திற்கு ஈடாக, இம்மாவட்டங்களில் பீடி தொழிலை நம்பியிருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். இந்தப் பகுதிகளில், அதிகபட்சமான குழந்தைகளின் கல்வி, பீடி தொழிலில் கிடைக்கும் வருமானத்தைத் தான் நம்பியுள்ளது.
அடிப்படைத் தேவைகளுக்காக, பீடி தொழிலில் ஈடுபடும் இவர்கள், புகையிலையைப் புகைக்காமலே அதனால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் ஆதாரத் தொழில் இது மட்டும்தான். சுற்றுவட்டாரங்களில் வேறு எந்த வாழ்வாதாரமும் இவர்களுக்கு இல்லை. இந்தத் தொழிலால் அதைச் சுற்றுபவர், விற்பவர் மட்டுமில்லாது, இடைத்தரகர்கள், அது தொடர்பான பொருள்களை விற்பவர்கள், கத்தரி சாணை செய்ய வருபவர் எனப் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் கரோனாவால் பிறப்பித்த ஊரடங்கு, இவர்களின் தலை மேல் பேரிடியாக விழுந்திருக்கிறது. தமிழ்நாடு அரசு, இதுபோன்ற கம்பெனியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்காவிட்டாலும், சம்பளம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள நிலையில், சில பீடி கடைகளில் மட்டும் ஊதியம் வழங்கியுள்ளனர். மீதமுள்ள கடைகள் அமைதிகாக்கின்றன.
இதுகுறித்து தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ராசம்மாள், "கரோனாவால் பீடி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதான் எங்களுக்கு முக்கியத் தொழில். இதன்மூலம் தான் எங்களுக்கு வருமானம் கிடைக்கும். தற்போது, தொழில் இல்லாமல் இருக்கிறோம். அரசுதான் எங்களுக்கு உதவவேண்டும். அரசு உதவினால் மட்டுமே எங்களுக்கு வழி பிறக்கும். நான் 30 ஆண்டுகளாக பீடி சுற்றி வருகிறேன். ஒரு நாளைக்கு ஆயிரம் பீடி சுற்றினால் 200 ரூபாய் கூலி கிடைக்கும். வாரத்துக்கு ஆயிரத்திலிருந்து, ஆயிரத்து 200 ரூபாய் வரை சம்பாதிப்பேன்" என்கிறார்.
இதுகுறித்து பீடி தொழிலாளி சித்ரா, "கரோனா கொடுத்த நெருக்கடியைச் சமாளிக்க பீடி தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஒரு சில பீடி நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கியுள்ளன. மற்றவை எவ்வித உதவியையும் செய்ய முன்வரவில்லை. நான் வேலை செய்யும் பீடி கம்பெனி எனக்கு நிவாரணம் கொடுத்துவிட்டது.
அரசாங்கம் எங்களைப் போன்ற தொழிலாளர்களுக்கு உதவிசெய்ய வேண்டும். தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் லட்சக்கணக்கான பெண்கள் பீடி சுற்றுகிறோம். எங்களின் வாழ்வாதாரமே இதுதான். பீடி கம்பெனி நிவாரணம் வழங்காவிட்டாலும், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்றார்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்ட பீடி தொழிலாளர்கள் சங்கத்தின் (சிஐடியு) பொதுச்செயலாளர் வேல்முருகன், பீடி தொழிலாளிகளின் சிரமத்தை முழுமையாக விளக்குகிறார். அவர் கூறுகையில், "திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 4 லட்சம் பீடி தொழிலாளர்கள் உள்ளனர். 46 பீடி கம்பெனிகள் இயங்கி வருகின்றன. எங்கள் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக பீடி சுற்றும் தொழில் தான் முக்கியத் தொழில். சாதாரண ஏழை, எளிய மக்கள் இந்த பீடி தொழிலை நம்பிதான் தங்கள் வாழ்க்கை தேவையை நிவர்த்தி செய்கின்றனர்.
மத்திய, மாநில அரசுகள் கரோனா பாதுகாப்புக்காக, ஊரடங்கு பிறப்பித்தன. இதனால், ஒரு தொழிலை மட்டும் வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் திணறிவருகின்றனர். அரசு அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இதுகுறித்து, எங்கள் சங்கம் சார்பில் பலமுறை அலுவலர்கள் தொடங்கி அமைச்சர் வரை மனுக்கள் அனுப்பினோம். ஆனாலும், இதுவரை எந்தவிதமான நிவாரணமும் கிடைக்கவில்லை. இதனால், பட்டினிச்சாவுகள் உருவாவதற்கான நிலைமை உருவாகி வருகிறது.
இதைத் தடுக்க, அரசு முன்வரவேண்டும். பீடி தொழிலாளர்களுக்கு, தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் 5 ஆயிரம் ரூபாய் கரோனா உதவித்தொகையாக வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். பலமுறை மனு அளித்தும், நிவரணம் வழங்கப்படவில்லை. இதையடுத்து, வரும் 27ஆம் தேதி திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் முழுவதும் அந்தந்த பகுதிகளில், சுமார் 200க்கும் மேற்பட்ட இடங்களில், தெருவில் இறங்கி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
தூத்துக்குடியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்தது போல, பீடி கம்பெனிகளில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். இந்த மாவட்டங்களில், 96 விழுக்காடு பெண்கள் பீடி சுற்றிதான் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா இல்லா கொடைக்கானலின் ரகசியம் என்ன?