நெல்லை : கல்லிடைக்குறிச்சி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. மேலும் அவ்வப்போது அடிவாரப்பகுதிகளுக்கு விலங்குகள் கீழே இறங்குகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் கல்லிடைக்குறிச்சி அருகே தெற்குபாப்பான் குளம் மற்றும் அங்குள்ள கோவில் வளாகத்தில் கரடி நடமாட்டம் இருப்பது சிசிடிவி கோமிராவில் பதிவாகி இருந்தது. எனவே கரடியை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துனை இயக்குனர் செண்பக பிரியா உத்தரவின் பேரில் அம்பாசமுத்திரம் வனச்சரக வேட்டை தடுப்பு காவலர்கள் இரு குழுக்களாக அமைக்கப்பட்டு அப்பகுதியில் தீ பந்தம் ஏந்தி இரவில் கரடியை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே கடையம் அருகே பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு சாலையில் நடமாடிய கரடி ஒன்று வியாபாரி உள்பட மூன்று பேரை கடித்துக் குதறியது.
இதில் இருவர் பலத்த காயம் ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ; பக்தி பாடல்கள் பாடி கோயிலில் வழிபட்ட ஜப்பான் நடிகை...