திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே உள்ள பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி என்னும் முதியவர். இவர் நுரையீரல் பிரச்சனை தொடர்பாக ஜனவரி 5ஆம் தேதி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் நேற்று (ஜனவரி 7) உயிரிழந்தார்.
இதனால் கோபமடைந்த உறவினர்கள், சிகிச்சை அளித்த பயிற்சி மருத்துவர் நித்திஷ் ஆர்தரை கடுமையாக தாக்கியுள்ளனர். அவர் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். இதனிடையே மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து நள்ளிரவில் போராட்டம் நடத்தினர்.
இதனால் சுமார் 3 மணி நேரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் ரவிசந்திரன், நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் ஆகியோர் பயிற்சி மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பயிற்சி மருத்துவரை தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைப்பெற்று வருவதாகவும், உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க:பாஜக கூட்டத்தில் கோஷ்டி மோதல்; நாற்காலிகளால் தாக்கிக்கொண்ட பரபரப்பு வீடியோ!