திருநெல்வேலி: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரையை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டு வருகிறார்.
நெல்லை மாவட்டத்தில் 20வது நாள் பயனத்தை தொடங்கிய அண்ணாமலை, மாலை அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். பாஜக தமிழக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் முன்பு தொடங்கிய யாத்திரை பாபநாசம் சாலை வழியாக, அம்பாசமுத்திரம் பேருந்து நிலையம் பூக்கடை பஜார் வழியாக கல்யாணி திரையரங்கம் முன்பு நிறைவு செய்யப்பட்டது. யாத்திரையின் நிறைவாக பேசிய அண்ணாமலை, "திமுக ஆட்சியில் 1999ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி நெல்லை மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்திய நிலையில், 17 பேர் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: "முதல் தலைமுறை இந்தி எதிர்ப்பு.. 3ஆம் தலைமுறை நீட் எதிர்ப்பு.. திமுகவின் நாடகம்" - வானதி சீனிவாசன் குற்றசாட்டு!
அவர்களது போராட்டத்தை வைத்தும் அவர்கள் உயிரிழந்ததை வைத்தும் திமுக அரசியல் செய்து வருகிறது. 17 பேர் கொல்லப்பட்டதற்கு திமுக அரசின் கையாளாகத்தனமே காரணம். தலித் மக்கள் 1999ஆம் ஆண்டு கொல்லப்பட்டது தொடர்பாக அப்போது எம்எல்ஏவாக இருந்து பேசிய அப்பாவு தற்போது திமுகவில் இணைந்து சபாநாயக உள்ளார். 40 பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழகம் புதுச்சேரியில் இருந்தும் அனுப்ப வேண்டும்.
தமிழகத்தில் முத்ரா திட்டம் மூலம் கடனாக 2 லட்சம் கோடி ரூபாய் கடந்த 9 ஆண்டுகளில் கொடுக்கப்பட்டு உள்ளது. 2014 ஆம் ஆண்டு 11வது பொருளாதார நாடாக இருந்த நம் நாடு தற்போது ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தால் மூன்றாவது பொருளாதார நாடாக நாம் வளருவோம். 2047 ஆம் ஆண்டு முதல் இடத்திற்கு முன்னேறுவோம் எனத் தெரிவித்தார்.
ஊழல் இல்லாமல் ஆட்சி செய்ய முடியும் என ஒன்பது ஆண்டுகளாக மோடி நிரூபித்து வருகிறார். சாராயம் குடிப்பதில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழக முதலமைச்சர் தமிழகத்தை மாற்றி உள்ளார். 44 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் மூலம் தமிழகத்திற்கு வருவாய் கிடைக்கிறது. தமிழக அரசு மக்களை குடி குடி என சொல்லி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து அரசு நடத்தி வருகிறது.
54 ஆயிரம் மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை ஒரு லட்சமாக பிரதமர் மோடி உயர்த்தி உள்ளார். 1974ஆம் ஆண்டு கச்சத்தீவு திமுக அரசால் தாரை வார்த்து கொடுக்கப்பட்டது. 85 மீனவர்கள் திமுக கூட்டணியிலான அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டனர். அரசியல் லாபத்திற்காக திமுக கச்சத்தீவை வைத்து பொய் சொல்லி வருகிறது.
இதையும் படிங்க: இன்ஸ்டா காதலுக்காக கணவரை கைவிட்ட பெண்.. நடத்தையில் சந்தேகித்து காதலியை கொன்ற காதலன்.. பின்னணி என்ன?
2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக பணி முடிந்து திறக்கப்படும். ஊழல் செய்பவர்கள், குடும்ப ஆட்சி செய்பவர்கள் என எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன. 40க்கு 40 எம்பிக்களை வழங்க வேண்டும். மூன்றாவது முறையாக மோடி 400 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும். தாமிரபரணியின் நதியில் மண் அள்ளப்படுகிறது. ஆறு மாசுபடுவதை தடுக்க அரசு தவறிவிட்டது" என்று பேசினார்.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, கச்சத்தீவு தாரைவாக்கப்பட்டது தொடர்பான காணொளி காட்சிகள் வெளியிடப்பட்டன. அதேபோல் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து தற்போதைய சபாநாயகர் அப்பாவு அப்போது எம்எல்ஏவாக இருந்த போது பேசிய தொடர்பான காணொளியும் வெளியிடப்பட்டது.
குறிப்பாக கச்சத்தீவு விவகாரத்தில் கடந்த 50 ஆண்டுகளாக திமுக - அதிமுக இடையே காரசார விவாதம் சட்டமன்றங்களிலும் அரசியல் பொது மேடைகளிலும் நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியின் போது அடிக்கடி சட்டப்பேரவை கூட்டத்தில் கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக தான் என்று பேசி வருகின்றனர்.
அதுவும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் போது கச்சத்தீவு விவகாரத்தை பலமுறை பேசி உள்ளார். அதேபோல் பதிலுக்கு திமுக தலைவர்கள் கச்சத்தீவு தாரைவாக்கப்பட்டதற்கும் திமுகவிற்கும் சம்பந்தமில்லை என்று அழுத்தமாக கூறி வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவு தாரைவாக்கப்பட்டதாகவும் அப்போது திமுக ஆட்சியில் இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அதற்கு கையெழுத்து போட்டதாகவும் அதன் பிறகு இந்திய வரைபடத்தில் இருந்து கச்சத்தீவு நீக்கப்பட்டதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
அம்பாசமுத்திரம் பகுதியில் நடந்த தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் ஸ்டாலின் திருநெல்வேலியில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என உறுதி அளித்தார். ஆனால் அது இதுவரை நடைபெறவில்லை எனக் கூறி உதயநிதி ஸ்டாலின் பாணியில் அண்ணாமலை செங்கலை உயர்த்தி காட்டிய நிலையில், பாஜக தொண்டர்களிடையே பெரும் ஆரவாரம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் திருப்பம்... ஸ்கெட்ச் போட்டது அரசியல் பிரமுகரா? வெளியான அதிர்ச்சி தகவல்!