திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த மிக கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் மற்றும் பிற நீர் நிலைகளின் அருகில் வசித்த மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்து பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
இதையடுத்து, வெள்ள நீர் வடிந்து மெல்ல மெல்ல திருநெல்வேலி மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி, தொல்.திருமாவளவன் எம்பி, துரை வைகோ போன்ற அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியாக திருநெல்வேலிக்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருநெல்வேலியில் வெள்ளத்தால் பதிக்கப்பட்ட ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (டிச.30) நடைபெறுகிறது.
தனது 68வது திரைப்பட பணிகளுக்காக ஹைதராபாத்தில் இருந்த நடிகர் விஜய் சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார். இந்நிலையில் நேற்று முந்தினம் கேப்டன் விஜயகாந்த் மரண செய்தியை கேட்டு அவரது உடலுக்கு அன்றைய தினமே சென்னையில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தித் திரும்பினர்.
இந்த சூழ்நிலையில், நடிகர் விஜய் இன்று தென் மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க இருக்கிறார். இதற்காக இன்று அதிகாலை திருநெல்வேலிக்கு வருகை தந்தார். அவரை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நேரில் சென்று வரவேற்றனர்.
பின்னர் மழை வெள்ள பாதிப்பு குறித்து நிர்வாகிகளுடன் விஜய் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதே சமயம், நடிகர் விஜய்யின் வருகை குறித்தும் அவர் நிவாரண உதவிகள் வழங்குவது குறித்தும் மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாகவே, அரசியல் நுழைவிற்காக தளபதி விஜய் அவர்கள் பல முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றார். குறிப்பாக, சில மாதங்களுக்கு முன்பு சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பட்டயங்கள் வழங்கி அவர் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல நலத்திட்ட உதவிகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.. அப்படியென்ன என்ன ஸ்பெஷல்..?