திருநெல்வேலி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இன்று (டிச.30) நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி நகர் மாதா மாளிகை திருமண மண்டபத்தில் வைத்து நடிகர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும், வீட்டை இழந்தவர்களுக்கும் அவர் நிதி உதவியும் வழங்கினார்.
இதற்காக அவர் இன்று மதியம் 12 மணி அளவில் தனி விமானத்தில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து, சாலை மார்க்கமாக பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் உள்ள மாதா மாளிகைக்கு வந்தார். இதையடுத்து, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள பயனாளிகளை, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரசிகர் மன்றத்தினர் தேர்வு செய்து, மாதா மாளிகைக்குள் அனுப்பி வைத்தனர்.
அவர்களுக்கு அங்கு, அரிசி உள்ளிட்ட மளிகை சாமான்கள் தொகுப்பையும், வேஷ்டி, சட்டை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் விஜய் வழங்கினார். சுமார் 1,500 பேருக்கு அறுசுவை மதிய உணவும் அங்கு தயாரிக்கப்பட்டு, வழங்கப்பட்டது. மேலும், மழை வெள்ளத்தின்போது மின்வாரிய பராமரிப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ராபின்சன் என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, வீடுகளை இழந்த வள்ளி என்பவருக்கு ரூ.50 ஆயிரம், இசக்கி என்பவருக்கு ரூ.50 ஆயிரம், சங்கரன் என்பவருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் வீடுகள் சேதம் அடைந்த 30 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்தை விஜய் வழங்கினார். மேலும் 5 கிலோ அரிசி, சர்க்கரை, ரவை, கோதுமை, சேமியா, உப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் வேட்டி, சட்டை, துண்டு ஆகியவற்றையும் ஆயிரத்து 500 பேருக்கு வழங்கினார்.
நடிகர் விஜய் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், ரசிகர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. நிவாரணம் பெறக்கூடிய டோக்கன் வைத்திருக்கும் பயனாளிகள் மட்டுமே ஹாலில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், நடிகர் விஜயைக் காண்பதற்காக அவரது ரசிகர்களும், பொதுமக்களும் அதிக அளவில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: நெல்லை விரைந்த நடிகர் விஜய்..வடை பாயசத்துடன் தயாராகும் தடபுடல் விருந்து!