திருநெல்வேலி:அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மணிமுத்தாறு பேரூராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் மொத்தமுள்ள 15-வார்டுகளில் திமுக 10-வார்டுகளை வெற்றி பெற்று பேரூராட்சியைக் கைப்பற்றியது.
இந்நிலையில், மணிமுத்தாறு பேரூராட்சியின் 12-வது வார்டு திமுக கவுன்சிலர் மாஞ்சோலை நாலுமுக்கு பகுதியைச்சேர்ந்த விஜயகுமாரன், அவருடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும், குடும்பச்சூழ்நிலை காரணமாகவும் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக தனது கடிதத்தை பேரூராட்சி அலுவலரிடம் ஒப்படைத்தார்.
அவர் கொடுத்துள்ள கடிதத்தில், 'எனது உடல்நலம் அடிக்கடி பாதிப்பதால் கவுன்சிலர் பணியைச் செய்ய முடியவில்லை. மருத்துவ காரணங்களுக்காக நான் வசிக்கும் எஸ்டேட் பகுதியில் இருந்து இடம் பெயர்கிறேன். என் பணியில் திறம்பட செயல்பட முடியவில்லை. தீராத மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளேன். எனவே, நான் ஏற்றுக் கொண்ட இந்த கவுன்சிலர் பதவியை மனதார ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
திடீரென திமுக கவுன்சிலர் ராஜினாமா செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'என்ஐஏ தமிழ்நாட்டில் நுழையத்தடை விதிக்கவேண்டும்' - எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் முபாரக்