திருநெல்வேலி: திருநெல்வேலி கேடிசி நகரை அடுத்த மங்கம்மாள் சாலையில் வசிப்பவர் அண்ணாமலை, இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தாய் அரசம்மாள் வயது (70), மகனின் வீட்டிலேயே தனியாக ஓர் அறையில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பாளையங்கோட்டை தீயணைப்புத்துறைக்கு வந்த தகவலில் கேடிசி நகர் அருகே மங்கம்மாள் சாலை குடியிருப்பில் சிலர் தீயில் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர், வீட்டின் மாடிப்படிக்கு கீழே விறகுகளில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
அதன்பின் உள்ளே கருகிய நிலையில் உடல் இருப்பதை கண்டு பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தீ ஜுவாலைக்குள் சிக்கிக்கொண்டது மூதாட்டி அரசம்மாள் என்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து அண்ணாமலையிடம் போலீசார் விசாரித்ததில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தனது தாய் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழும் சூழலில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட மூதாட்டி, விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்றது எவ்வாறு? அலறல் சத்தம் எதுவும் அருகில் இருந்தவர்களுக்கு கேட்காத சூழலில் மூதாட்டி தற்கொலை தான் செய்து கொண்டாரா? என்பது குறித்தும் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில், வேறு யாரேனும் மூதாட்டியை கொலை செய்து உடலை விறகுகள் நிறைந்த பகுதியில் போட்டு எரித்துவிட்டனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மாமியார் மருமகள் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதனால் ஒரே வீட்டில் தனி அறையில் மூதாட்டி வசித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது சந்தேக மரணம் என்ற அடிப்படையில் 174 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Video: ராக்கெட்டை வாயில் கவ்விக்கொண்டு கொளுத்திய இளைஞர்!