திருநெல்வேலி: கர்நாடகாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 6 டன் குட்காவை தச்சநல்லூர் காவல் நிலைய அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் லாரியில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக தச்சநல்லூர் காவல் நிலைய அலுவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் தச்சநல்லூர் அருகே கரையிருப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்கிடமான வகையில் சென்ற காரை மடக்கி விசாரணை செய்தபோது ஓட்டுநர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
மேலும், காருக்கு பின்னால் வந்த இரண்டு லாரிகளை சோதனையிட்டபோது உள்ளே அட்டைப் பெட்டிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. காரை ஒட்டிவந்தது கரையிருப்பு பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பதும், அவர் முன்னால் நோட்டமிட்டபடி இரண்டு லாரிகளையும் குடோனுக்கு அழைத்து செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு லாரிகள், கார் மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் பல லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சரவணன், லாரிகளில் போதை பொருள் கடத்தி வரப்பட்டதாக தச்சநல்லூர் காவல் ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சோதனை செய்தபோது கரையருப்பு பகுதியில் இரண்டு லாரிகளில் குட்கா போதைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு 38 லட்சம் ரூபாய் ஆகும். மொத்தம் 6 டன் எடையுள்ள குட்கா பறிமுதல் செய்துள்ளோம். காரை ஓட்டி வந்த வேல்முருகன்(38) மற்றும் லாரியை ஓட்டி வந்த ராமச்சந்திரன்(28) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மற்றொரு லாரியில் வந்த சுப்பிரமணியன் மற்றும் குமார் ஆகிய இருவர் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லையில் போதைப்பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போதைப் பொருட்களால் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அதிக கவனம் செலுத்தி வருகிறோம். முதல்கட்ட விசாரணையில் இந்த இரண்டு லாரிகளும் கர்நாடக மாநிலத்திலிருந்து போதை பொருட்களை ஏற்றிவந்தது தெரியவந்துள்ளது. இங்கு அவர்கள் சில்லறை விற்பனையாளர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்ய முயன்றுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இதுதொடர்பாக 30 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.