நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் வாக்குச்சாவடிகளை கண்காணிப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு மேற்கொண்டார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளில் 1,924 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச் சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்களை வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. நெல்லை மாவட்டம் 157 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 13 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ராதாபுரம் மற்றும் பாளையங்கோட்டை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் கூடுதலாக கண்காணிக்கப்படுகின்றன. ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் சிறப்பு தனிப்படை மூலம் கண்காணிக்கப்படும்.
சி-விஜில் ஆப் மூலம் வாக்குச்சாவடியில் நடைபெறும் முறைகேடு உள்ளிட்ட புகார்களை உடனடியாக தெரிவிக்கலாம். இதுவரை பணப்பட்டுவாடா தொடர்பாக புகார்கள் எதுவும் வரவில்லை. அப்படி எங்களுக்கு புகார்கள் வந்தால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை மாவட்டத்தில் உள்ள 50 சதவித வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் ஆணையமும் நெல்லை மாவட்ட நிர்வாகமும் இணைந்து வெப் கேமரா மூலம் கண்காணிக்கும்" என்றார்.