திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே போலீசாரின் வாகன சோதனையில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள 127 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா போதைப்பொருளை, விற்பனைக்கு கொண்டு சென்ற நாம் தமிழர் இயக்க இராதாபுரம் தொகுதி நிர்வாகி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே சாத்தான்குளம் செல்லும் சாலையில், திசையன்விளை காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவை சோதனை இட்டபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்காவை மூட்டைகளாக கட்டி கொண்டு சென்றது தெரிய வந்தது.
விசாரணையில் நாம் தமிழர் கட்சியின் ராதாபுரம் தொகுதி துணைச் செயலாளர் திசையன்விளையைச் சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்களான சேகர், மாரி ராமன், தூத்துக்குடி மாவட்டம் சவேரியார் புரத்தைச் சேர்ந்த ஒருவர் ஆகிய நான்கு பேரும் குட்காவை, பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது. அவர்கள் நால்வரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 127 கிலோ குட்காவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மேடைக்கு மேடை தமிழகத்தில் கஞ்சா, மது போன்ற போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என குரல் எழுப்பி வருகிறார். குறிப்பாக போலீசார் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் ஆதரவோடு தான் கஞ்சா, குட்கா போன்றவை தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதாக நாம் தமிழர் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இதுபோன்ற சூழலில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் மூட்டை மூட்டையாக குட்கா கொண்டு சென்றபோது கைதான சம்பவம் சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, வட்டார வள அலுவலர்களை பணி நீக்கம் செய்தது பழிவாங்கும் நடவடிக்கை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, கடந்த 2014ம் ஆண்டு 22 மாவட்ட மற்றும் 543 வட்டார வள அலுவலர்கள் என மொத்தம் 565 வள அலுவலர்கள் போட்டித்தேர்வு மூலம் முறையாகப் பணி நியமனம் செய்யப்பட்டுப் பணிபுரிந்து வந்தனர். அவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாததோடு, கடந்த ஓராண்டாக அடிப்படை ஊதியமும் வழங்க மறுத்து திமுக அரசு அப்பட்டமான தொழிலாளர் விரோதப்போக்கினை கடைபிடித்து வந்தது.
ஏற்கெனவே, 1996-ம் ஆண்டு திமுக அரசால் நியமிக்கப்பட்ட 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை, பின்னர் வந்த அதிமுக அரசுப் பணியிலிருந்து நீக்குவதும், திமுக அரசு மீண்டும் பணியில் சேர்ப்பதும் என கடந்த 33 ஆண்டுகளாக இரு திராவிட அரசுகளும் மாறி மாறி மக்கள் நலப்பணியாளர்களின் வாழ்வினையே முற்றாகச் சிதைத்து இருளில் தள்ளியுள்ளது. அப்படி ஒரு நிலைமை வள அலுவலர்களுக்கும் ஏற்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் திமுக அரசுக்கு உண்டு. ஆகவே, திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியைக் கைவிட்டு, 560 மாவட்ட மற்றும் வட்டார வள அலுவலர்களின் குடும்ப வாழ்வாதார சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, அவர்களை பணி நீக்கம் செய்யும் அரசாணையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துவதாக குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: போதைப்பொருள் பழக்கத்தை ஊக்குவிக்கிறார் - நடிகர் விஜய் மீது காவல் ஆணையரிடம் புகார்!