தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்குள்பட்ட வருசநாடு பகுதியில் வசித்துவருபவர் மகாராஜன். தச்சுத் தொழிலாளியான இவரது மனைவி மீனா, மகன் விக்னேஷ், மகள் சுரேகா (18). கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, தான் தச்சு வேலைசெய்யும் பொருள்களை விக்னேஷ் எடுத்துச் சென்றதற்காகக் கூறி, மனைவி மீனாவுடன், மகாராஜன் சண்டையிட்டார். அப்போது மகள் சுரேகா பெற்றோரிடம் சண்டையிடாதீர்கள், எனக்கு அசிங்கமாக இருக்கிறது எனக் கூறியதற்கு, இருவரும் நீ இதில் தலையிடாதே என்று சொல்லியுள்ளனர்.
இதனால் கோபித்துக் கொண்ட சுரேகா கடந்த நவம்பர் 19ஆம் தேதி அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிறகு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவந்த சுரேகா நேற்று முன்தினம் (நவ. 23) மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்தவர், சிகிச்சைப் பலனின்றி இன்று (நவ. 25) உயிரிழந்தார். இது குறித்து வருசநாடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். குடும்பப் பிரச்சினை காரணமாக சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேனி அருகே போலி மருத்துவர் கைது!