சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து ஜனவரி 27ஆம் விடுதலை செய்யப்பட்ட சசிகலாவிற்கு கரோனா நோய்த் தொற்று காரணமாக விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சசிகலா நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில் சசிகலா விடுதலை செய்யப்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் அமமுகவினர் மட்டுமல்லாது சில அதிமுகவினரும் ஆதரவு தெரிவித்து சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இவ்வாறு சுவரொட்டி ஒட்டிய அதிமுகவினரை அக்கட்சி தலைமை கட்சியிலிருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த வைகை சாந்தகுமார் என்பவர் சசிகலாவிற்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டியுள்ளார்.
இவர் பெரியகுளம் மேற்கு ஒன்றிய அம்மா பேரவை அவைத்தலைவராகவும், பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையின் மாவட்ட இளைஞரணி செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
தேனி, பெரியகுளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள அந்த சுவரொட்டியில், எங்கள் குலசாமியே! தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற தீயாக வருகை தரும்... தியாகத் தலைவி சின்னம்மா அவர்களே வருக!! வருக!!! என்று அச்சிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா'... மூவரும் இணைந்த வலிமையான அதிமுக தேவை!