தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், முத்துக்கிருஷ்ணாபுரம், கொப்பையன்பட்டி, சண்முகசுந்தரபுரம் ஆகிய கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான நெசவாளர்கள் உள்ளனர். இங்கு நாளொன்றுக்கு ஏறத்தாழ 3,000 காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மேலும் தினசரி ரூ.5 முதல் 10 லட்சத்திற்கான வர்த்தகம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், நெசவாளர்கள் குறித்து சிலர் தவறான தகவல்களை தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் அமலாக்கப்பிரிவுக்கு புகார் அளித்ததாகவும், அந்தப் புகாரின் அடிப்படையில் அமலாக்கப் பிரிவு அலுவலர்கள் அடிக்கடி சோதனையில் ஈடுபட்டு, நெசவாளர்களுக்கு அபராதம் விதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நெசவுத் தொழில் குறித்து பொய்யான புகார் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆண்டிப்பட்டி பகுதி நெசவாளர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பிரச்னை குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தைத் தீவிரப்படுத்தவும் நெசவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 'இன்பினிட்டி பார்க்' - மாற்றுத்திறனாளி சிறுவர்களின் உலகம்!