தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. வராக நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் மொத்த உயரம் 126.28 அடியாகும்.
அகமலை, உலக்குருட்டி, உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணையின் நீர் மட்டம் 120 அடியை எட்டியது. அதையடுத்து கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி முதல் பெரியகுளம், அதன் சுற்று வட்டாரத்திலுள்ள பழைய, புதிய ஆயக்கட்டுப் பகுதிகளான 2 ஆயிரத்து 865 ஏக்கர் பாசன நிலங்களுக்கு, 30 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதையடுத்து, தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்று (நவ.06) காலை நிலவரப்படி 123.28 அடியை எட்டியது. அணையின் நீர் இருப்பு 95.21 மி.கன அடியாக இருந்தது.
இந்நிலையில் (நேற்று நவ.06) பகல் முழுவதும் பெய்த தொடர் மழையால், இரவு 10 மணி வாக்கில் 3 அடி உயர்ந்து அணையின் முழுக்கொள்ளளவான 126.28 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு, 90 கன அடியாக உள்ளதால், பாதுகாப்பு கருதி உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
ஏற்கனவே பாசனத் தேவைக்காக 30 கனஅடி நீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சோத்துப்பாறை அணை முழுக்கொள்ளளவை எட்டியதால் பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனிடையே உபரிநீரை பாப்பிரெட்டி, தாமரைக்குளம் உள்ளிட்ட கண்மாய்களில் நிரப்பும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சோத்துப்பாறை அணை நீர் மட்டம் நிரம்பி வழிவதால் பெரியகுளம் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்துக்கு பவானிசாகரிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் நிறுத்தம்