தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் 135 ஆண்டுகளாக 30 வார்டுகளை மட்டுமே கொண்டு செயல்பட்டு வருகிறது. பெரியகுளம் நகராட்சியின் பரப்பளவு இதுவரை விரிவுபடுத்தபடாத நிலையில் இருந்து வந்தது. இதனிடையே நகராட்சியை விரிவுபடுத்துவதற்காக தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன.
இந்நிலையில், நேற்று (டிசம்பர் 19) பெரியகுளம் நகராட்சியில் இந்த ஆண்டுக்கான இறுதி நகர் மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரியகுளம் நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் மற்றும் நகராட்சி ஆணையர் புனிதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியகுளம் நகராட்சியை விரிவுபடுத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில், பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சி, என்டபுலி ஊராட்சி மற்றும் தென்கரைப் பேரூராட்சி, தாமரைக் குளம் பேரூராட்சி, வடுகபட்டி பேரூராட்சி ஆகிய மூன்று பேரூராட்சிகள் மற்றும் இரண்டு ஊராட்சிகளை இணைத்து பெரியகுளம் நகர் பகுதியில் விரிவாக்கத்தை கொண்டு வர வேண்டுமென பெரியகுளம் நகர்மன்ற கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பெரியகுளம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை மண்புழு உரத்தைக் கொண்டு விளைவிக்கப்பட்ட வெண்டிக்காய், தக்காளி, சுரைக்காய், உள்ளிட்டவர்களை நகர் மன்ற கூட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்காமல் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி காய்கறிகள் தயாரிக்கப்படுவதை வரவேற்ற நகர் மன்ற உறுப்பினர்கள் மேலும் பெரும் அளவில் தயாரித்து மக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 2022ஆம் ஆண்டு வரவேற்பைப் பெற்ற வெப் சீரிஸ் படங்கள் ஒரு பார்வை!