தேனி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கேரள எல்லையில் உள்ள கம்பம் பகுதியில் நேற்று விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால், திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எல்.எப்.ரோட்டில் சில இடங்கள் குண்டும், குழியுமாக காட்சியளித்தன. அதோடு அதில் தேங்கியிருந்த மழைநீரால், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பாதசாரிகளும் சிரமம் அடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து தலைமைக் காவலர் தாமரை மாணிக்கம், சேதமடைந்த சாலையை தாமாக முன்வந்து தனி ஆளாக சீரமைத்தார். அருகில் இருந்த மண் மற்றும் ஜல்லிக்கற்களை மண்வெட்டியில் எடுத்து, பள்ளமாக கிடந்த சாலைகளை செப்பணிட்டு போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் தயார் படுத்தினார். இதனால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி பயணம் செய்கின்றனர்.
சீருடையில் இருந்த போக்குவரத்து காவலர் கையில் மண்வெட்டியுடன், சேதமடைந்த சாலையை சீரமைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றது. போக்குவரத்து காவலரின் இந்தச் செயலை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி மற்றும் சக காவல்துறையினர் மட்டுமின்றி அப்பகுதி மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: மூதாட்டிக்கு காப்பீடு தொகை வழங்காமல் அலைக்கழிக்கும் நிதி நிறுவனம்!