தமிழ்நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், தேசிய நிறைவுநிலைத் தேர்வை (நெக்ஸ்ட்) ரத்து செய்ய வேண்டும், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்திவருகின்றனர்.
நான்காவது நாளான இன்றும் அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும் மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கறுப்பு பேட்ஜ் அணிந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியதையடுத்து, பொதுமக்களுக்கு தங்களது கோரிக்கைகளை தெரியப்படுத்தும் விதமாக ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு மதுரை சாலை வழியாக ஊர்வலமாக கோரிக்கைகள் பிரசுரிக்கப்பட்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர்.