தேனி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமுதாயக் கூடம், நியாய விலைக்கடை கட்டடங்களை திறந்து வைத்தார்.
முதலாவதாக அரண்மனைப் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை திறந்து வைத்தார். அங்கு மரக்கன்று நட்டு வைத்தார். மேலும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி கிராமத்தில் ரூ.8.75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடையை திறந்து வைத்தார். பின்னர் அரசி, சர்க்கரை, பாமாயில், கொண்டைக்கடலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து விற்பனயை தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்வுகளில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதேபோன்று தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ. 40 லட்சம் மதிப்பில் போடி தென்றல் நகர், அசோக் நகர், சுப்புராஜ் நகர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள நான்கு அங்கன்வாடி மையங்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 1.36 கோடி மதிப்பில் போடி மயானக்கரை பகுதியில் கட்டப்பட்டுள்ள இரண்டு நுண்ணுயிர் உரக்கலவைக் கூடங்களையும் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். தொடர்ந்து இத்திட்டத்தின் செயல் திறன் குறித்து அலுவலர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
இதையும் படிங்க: தேனியில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான இடத்தைப் பார்வையிட்ட ஓபிஎஸ்!