தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய பெருந்தலைவர், துணைத் தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றுவருகிறது. அதனைத் தொடர்ந்து, தேனி மாவட்டத்திலுள்ள 8 ஒன்றியங்களுக்கு மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது.
இதில், மாவட்ட ஊராட்சி பதவிகளுக்கு போட்டியின்றி தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக வென்றது. ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம் ஆகிய 3 ஒன்றியங்களில் அதிமுகவும், கம்பத்தில் பாஜகவும், தேனியில் திமுகவும் ஒன்றியத்தலைவர் பதவியை கைப்பற்றின. மீதமுள்ள பெரியகுளம், சின்னமனூர், கடமலை – மயிலை ஒன்றியங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பங்கேற்காததால் மறைமுகத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
பெரியகுளம் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற திமுக ஒன்றிய கவுன்சிலர் செல்வம், சின்னமனூர் ஒன்றியத்தில் வெற்றிபெற்ற திமுக ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தியையும் அதிமுக பக்கம் சாய்ந்துவிட்டதால் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றும் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் திமுகவிற்கு சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் இரு கட்சிகளும் சம பலத்துடன் இருந்த சின்னமனூர், கடமலை மயிலை மற்றும் பெரியகுளத்தில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் மறைமுகத் தேர்தலைப் புறக்கணித்தனர். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். மறைமுகத் தேர்தல் நடத்த பெரும்பான்மை இல்லாத காரணத்தால், இறுதியாக மூன்று ஒன்றியங்களிலும் மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனைக் கண்டித்து தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமையில் பெரியகுளம், சின்னமனூரில் திமுக கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிமுகவிற்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சின்னமனூர் ஒன்றிய அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
இதையும் படிங்க: வாக்குப் பெட்டியுடன் ஓட முயன்ற அதிமுக வேட்பாளர் - சிசிடிவி காட்சி!