தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ளது வைகை அணை. இதன் நீர்த்தேக்கப் பகுதிகளான சக்கரைப்பட்டி, சாவடிப்பட்டி, சொக்கத்தேவன்பட்டி ஆகிய இடங்களில் அணையின் பின்பகுதியில் சட்டவிரோதமாக கிணறு வெட்டி, அதிலிருந்து நீர் எடுத்து பயன்படுத்துவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது.
அதனடிப்படையில், பெரியகுளம் வட்டாட்சியர், பொதுப்பணித்துறையினர் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அணை பகுதியில் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு கிணறு தோண்டும் பணியில் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் அங்கு அலுவலர்கள் வருவதைக் கண்ட ஜேசிபி இயந்திர ஓட்டுநர்ழ அங்கிருந்து தப்பி சென்றார். இதனைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள் பெரியகுளம் வட்டாசியர் அலுவலத்திற்கு எடுத்துச் சென்றனர்.
மேலும் வைகை அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளில் தொடர்ந்து கண்காணித்து சட்ட விரோதமாக கிணறு வெட்டுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய், பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.