தேனி மாவட்டம் கைலாசபட்டி பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜெயபால், அவரது மகன் நந்தா ஆகியோர் கஞ்சா விற்றுவருகிறார்கள். இதனால், அப்பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா வாங்க வருபவர்கள் அவர்களின் வீடு தெரியாமல், பக்கத்து வீடுகளின் கதவைத் தட்டி கஞ்சா கேட்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறுவதால் கிராமத்தில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் மனோஜ், பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், புகார் கொடுத்த இரவே மனோஜின் வீடு, அவரது டாடா மேஜிக் வாகனத்தின் கண்ணாடியை ஜெயபாலும் நந்தாவும் அடித்து உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
எனவே, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் காவல் துறையினர் கஞ்சா விற்பவர்களுக்குத் துணையாகச் செயல்படுவதாகக் கூறி கிராம மக்கள் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பிறகு கிராம மக்கள் கலைந்துசென்றனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் தரப்பில், "கஞ்சா விற்பவர்கள் பற்றி புகார் கொடுத்ததைக் காவல் துறையினரே அவர்களுக்கு தகவல் தந்ததாலேயே, கஞ்சா விற்பவர்கள் வீட்டைத் தாக்கினர். காவல் துறையினர் மாதந்தோறும் பணம் வாங்கிக்கொண்டுதான் இவர்களை விற்பனை செய்யவிடுகிறார்கள்.
இது தொடர்பாக பெரியகுளம் காவல் துறை துணை கண்காணிப்பாளருக்கு பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்பொழுது புதிதாக வந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளராவது நடவடிக்கை எடுப்பார் என நினைத்து புகார் கொடுக்கப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அத்துமீறி நுழைய முயற்சி - எல்லையில் தடுத்த போலீஸ்; ஓசுரில் பரபரப்பு!