தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில், தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு ஒன்றியங்களில் டிசம்பர் 27இல் முதற்கட்டமாகவும் தேனி, போடி, பெரியகுளம், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய ஆறு ஒன்றியங்களில் டிசம்பர் 30ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குச்சீட்டால் ஏற்பட்ட குளறுபடி
இதில் போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்புக்கோட்டை ஊராட்சியில், கிராம ஊராட்சி 8ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் ராசு என்பவருக்கு ஒதுக்கப்பட்ட 'கார் சின்னம்' வாக்குச்சீட்டில் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவ் நடத்திய விசாரணையில் தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட வார்டுக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் பரிந்துரை செய்தார்.
மறுவாக்குப்பதிவு
அதனடிப்படையில் உப்புக்கோட்டை ஊராட்சி பச்சையப்பா மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் - 52AVஇல் புதன்கிழமை காலை 7.00 மணி முதல் 5.00 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குகளைச் செலுத்தினர். வாக்களித்தவர்களுக்கு அடையாள மை இடது கை நடுவிரலில் வைக்கப்பட்டது.
முன்னதாக இந்த வார்டில் டிசம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 80 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேட்பாளரின் பெயர், சின்னம் இடம்பெறாததால் மறு வாக்குப்பதிவுக்குப் பரிந்துரை