தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் தேனி – அல்லிநகரம் நகராட்சிப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் கலந்து கொண்டு அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். கூட்டத்தில் பேசிய ஓ.பி.ஆர், “மத்திய, மாநில அரசுகள் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்திட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் மேற்கொண்டுவருகிறது. அதனடிப்படையில், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நோய் தொற்று பராவாமல் தடுக்கும் வகையில், சுகாதாரப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அளவில் நாளொன்றுக்கு 64 நபர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா, ஜெர்மன் போன்ற நாடுகள் விஞ்ஞானம், சுகாதாரம், மருத்துவ ஆராய்ச்சிகளிலும் முதன்மை வகித்து வருகிற போதிலும், கரோனா நோய் தொற்றினால் மிகவும் பாதிப்படைந்துள்ளன.
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மற்ற மாநிலங்களின் கவனத்தை ஈர்த்தது.
தமிழ்நாட்டிலுள்ள மற்ற மாவட்டங்களில் கரோனா தொற்று வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த 12 நாட்களில் புதிய தொற்று பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படவில்லை எனப்து பெரும் சாதனையாகும்” என்றார்.
இக்கூட்டத்தில், பெரியகுளம் திமுக எம்.எல்.ஏ சரவணக்குமார், தேனி ஆவின் தலைவர் ஓ.ராஜா உள்பட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தேனியில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஓபிஎஸ் ஆய்வு!