தேனி மாவட்டம் கடமலை – மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட மேகமலை ஊராட்சியில் பொம்முராஜபுரம், இந்திராநகர், கூடாம்பாறை, அரசரடி உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. மேகமலை வனச்சரகத்திற்குட்பட்ட இப்பகுதியில் சாலை வசதி ஏதும் இல்லாததால் அப்பகுதி மக்கள் நடைபயணமாகவும், மாட்டு வண்டி, ஜீப்புகள் போன்றவற்றைத்தான் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு வனத்துறையினர் இவ்வழித்தடத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி வைத்ததால், இவ்வழித்தடத்தில் வண்டிகள் ஏதும் செல்ல முடியாத சூழல் உண்டாகியுள்ளது.
இதனால், கோபமடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வனத்துறையின் செயலைக் கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும், இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, '80 ஆண்டுகள் கடந்து மூன்று தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்து வருகின்றோம். அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேசன் பொருட்கள் தலைச்சுமையாகவும், பள்ளிகளுக்கு செல்கின்ற பிள்ளைகள் நடைபயணமாகவும் சென்று வருகின்றனர். அவசர கால நேரத்தில் மருத்துவமனைக்கு சென்று வருவதிலும் சிரமத்துடன் வாழந்து வருகின்ற சூழலில் இவ்வழித்தடத்தில் வனத்துறையினர் முட்டுக்கட்டை போட்டிருப்பது மிகுந்த மன வேதனையளிக்கிறது. மேலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்களது ஆதார் மற்றும் குடும்ப அட்டைகளான குடியுரிமைகளை அரசிடம் ஒப்படைப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.