தேனி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாகத் திகழ்கிறது. 10க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மூலம் ஆவின் நிர்வாகத்தால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், சமீப காலமாக தேனி மாவட்ட விவசாயிகளிடம் முழுமையாக பால் கொள்முதல் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனிடையே, தமிழ்நாடு தேசிய விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கரோனா நோய் பரவலால் உற்பத்தி செய்த பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வேளையில், விவசாயத்திற்கு மாற்றாக வருமானம் தரக்கூடிய பால் தொழிலையும் நசுக்கும் வகையில் உற்பத்தியான பால் முழுவதையும் கொள்முதல் செய்யாமல் ஆவின் நிர்வாகம் வஞ்சிக்கிறது.
எனவே, விவசாயிகளிடம் உற்பத்தியான பால் முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் பால் கோவா, நெய் போன்றவைகள் உற்பத்தி செய்வதற்காக விவசாயிகளுக்கு மானிய விலையில் இயந்திரங்கள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.