தேனி: தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள உணவகங்கள், பழக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்டவைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடியாக சோதனையிட்டு வருகின்றனர். சோதனையில் கிடைக்கும் காலாவதியான உணவுப்பொருட்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள பழக்கடைகள், உணவு விடுதிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் உணவு பாதுகாப்புத்துறை இன்று (ஜூலை 20) திடீர் ஆய்வு மேற்கொண்டது. பள்ளி வளாகத்தைச் சுற்றியுள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும், உணவு விடுதிகளில் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்கப்படுவதாகவும் எழுந்தப் புகாரை அடுத்து தேனி மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: Tomato Price Hike: மகள் பிறந்தநாள் விழாவில் விருந்தினர்களுக்கு தக்காளி விநியோகித்த தந்தை!
இந்த ஆய்வில் பள்ளி வளாகத்திற்கு அருகில் உள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளி வளாகத்திற்கு அருகில் இருந்த ஐஸ்கிரீம் கடை ஒன்றில் ஆய்வு செய்யப்பட்ட போது காலாவதியான ஐஸ்கிரீம் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. அங்கு இருந்த பழக்கடை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பார்ப்பதற்கு பளப்பளப்பிற்காக மெழுகு பூசப்பட்ட பழங்களில் பளபளப்பாக இருப்பதற்காக மெழுகு பூசப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு பழங்கள் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: Tenkasi: குற்றாலம் ஹோட்டலில் கெட்டுப்போன 50 கிலோ உணவுப்பொருட்கள் பறிமுதல்!
மேலும் அங்குள்ள பல் பொருள் அங்காடிகள் மற்றும் டீக்கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் கப்புகள் போன்றவற்றை பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு சம்பந்தப்பட்ட கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அருகில் உள்ள பேக்கரிகளில் அச்சிடப்பட்ட நாளிதழ்களில் சுற்றப்பட்டு கேக்குகள் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டு, அவைகளையும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
இவ்வாறு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்தப்பட்டாலோ அல்லது காலாவதியான உணவுப்பொருட்கள் ஏதேனும் விற்கப்பட்டாலோ அவர்களது உணவு பாதுகாப்புத் துறை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
முன்னதாக, பெரியகுளம் தென்கரைப் பகுதியில் உள்ள மீன் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் 10 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஹோட்டல்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் வழங்குவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தனியார் உணவகத்தில் கெட்டுப்போன 50 கிலோ இறைச்சி உள்ளிட்டவைகளை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: ஈரோடு நேதாஜி தக்காளி வரத்து அதிகரிப்பு; கிலோ ரூ.70-க்கு விற்பனை!