இந்தியாவில் ஏலக்காய் சாகுபடியில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாட்டின் போடி மெட்டு, கம்பம்மெட்டு ஆகிய பகுதிகள் உள்ளன. இதன் காரணமாக ஏலக்காய் வர்த்தகத்திற்கான ஏல மையம் இந்திய நறுமண வாரியம் சார்பில் இடுக்கியில் உள்ள புற்றடி, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஆகிய இரு இடங்களில் மட்டுமே செயல்பட்டுவருகின்றது.
போடியிலுள்ள ஏலக்காய் ஏல மையத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 ஆயிரம் கிலோவரை ஏலம் நடைபெறும். மின்னணு முறையில் நடைபெற்றுவரும் இங்கு கேரளா, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏல விவசாயிகள், வியாபாரிகள் அதிகம் வருவதுண்டு.
இந்நிலையில் கரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் 15ஆம் தேதிமுதல் போடி ஏல வர்த்தக மையம் மூடப்பட்டது. தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்த தடையால் பல கோடி ரூபாய் ஏலக்காய் வர்த்தகம் பாதிப்படைந்தது.
இதனையடுத்து பொது முடக்கத்தில் தளர்வு ஏற்படுத்தி நிபந்தனைகளுடன் சில வர்த்தகங்கள் செயல்பட அரசு அனுமதியளித்தது. அதன்படி கேரளாவில் புற்றடியில் உள்ள ஏல விற்பனை மையம் கடந்த 28ஆம் தேதிமுதல் செயல்படுவதற்கு அம்மாநில அரசு, இடுக்கி மாவட்ட ஆட்சியர் அனுமதிமளித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் போடியில் உள்ள ஏல வர்த்தகத்தை தொடங்குவதற்கு தேனி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என்று ஏலக்காய் விவசாயிகள், வியாபாரிகள் கோரிக்கைவிடுத்தனர். மேலும் கொச்சியில் உள்ள இந்திய நறுமண வாரியமும் போடி ஏலக்காய் ஏல விற்பனை மையத்தை செயல்படுத்த அனுமதிக்கக்கோரி கேட்டுக்கொண்டது.
அதனை ஏற்று மே 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் போடியில் ஆய்வுசெய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி போடியில் மின்னணு ஏல விற்பனை மையம் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் இந்திய நறுமண வாரியம் வழங்கும் அட்டவணைப்படி, நாள் குறிப்பிட்டு ஏலம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கேரளாவில் ஏலக்காய் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டினருக்கு அனுமதி