தேனி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெரியகுளம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை, கம்பம், போடி அரசு மருத்துவமனை, ஓடைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவற்றில் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் கரோனா உள்நோயாளிகளாக சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவர்களில் கடந்த ஜூன் 17ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட 16 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்ததற்கான பரிசோதனை கடந்த ஜூன் 27ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் பரிசோதனை முடிந்து ஐந்து நாட்கள் கடந்த நிலையில் தற்போது வரை அவர்களுக்கு பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் பரிசோதனை முடிவுகளை உடனே அறிவிக்கக் கோரி நேற்று (ஜுலை 2) வழங்கப்பட்ட மதிய உணவினை சாப்பிட மறுத்து கரோனா நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மருத்துவர்களும் அலுவலர்களும் நோயாளிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து பரிசோதனை முடிவுகள் வரத் தாமதானது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதன் பின்னர் சமாதானமடைந்த நோயாளிகள் உணவருந்தினர்.
இதையும் படிங்க... கரோனா ஹீரோக்களுக்கு பாராட்டு ஓவியம்: 400 பேர் வரைந்து சாதனை