தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவருதால் தேனி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று (நவம்பர் 19) ஆய்வு மேற்கொண்டார்.
ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட வைகை ஆற்றங்கரைப்பகுதிகளில் நேரில் சென்று ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேனி மாவட்டத்தில் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையினால் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 135 கண்மாய்களில் 11 கண்மாய்கள் முழுவதுமாக நிரம்பியுள்ளன.
மேலும் பல கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்துவருவதால் அவசரகால பணிகளை மேற்கொள்ள அனைத்துத் துறையினருக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆற்றங்கரைப்பகுதிகள், நீர்நிலைகளில் வசிக்கின்ற பொதுமக்கள் கவனமுடனும், முன் எச்சரிக்கையுடன் இருக்கவும், விளையாடவோ, குளிக்கவோ, துவைக்கவோ, வேறு காரணங்களுக்காகவோ நீர்நிலைகளுக்குச் செல்ல வேண்டாமெனவும், சுற்றுப்புறங்களை சுத்தமாகவும், சுகாதாரமாக வைத்திடவும் உள்ளாட்சி அமைப்பினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.
மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 43 பகுதிகளை, கண்காணிப்புக் குழு அலுவலர்கள், வட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அலுவலர்களைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவசர காலங்களில் வெள்ளம் மழையினால் பாதிப்புக்குள்ளாகும் மக்களைத் தங்கவைத்திட 66 தங்கும் இடங்கள் தேர்வுசெய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தினால் பாதிப்புகள் ஏற்படும்போது பொதுமக்களை மீட்க 195 நீச்சல் வீரர்களின் பட்டியல், தொலைபேசி எண்கள், 2 நாரிழை படகுகள், 117 பரிசல்கள், மீட்கக் கூடிய உபகரணங்கள், பொது மக்களை மீட்க 71 மாநில பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற குழுவினர் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படின் அதற்கு தேவையான மருந்து பொருட்கள் மற்றும் உணவுப்பொருள்கள், பொதுமக்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், அத்தியாவசியப்பொருட்கள், காலி சாக்கு பைகள், சாலைகளில் விழும் மரங்கள், பாறைகளை அகற்றிட மர அறுவை இயந்திரம், ஜே.சி.பி போன்ற இயந்திரங்கள், மின் கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கண்டமனூர் ஆற்றில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கண்டமனூர் பாலத்தில் கனரக வாகனம் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணிலும், 04546-261093 என்ற எண்ணிலும் தெரிவித்திடலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி உள்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.