கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேயிலை, ஏலத்தோட்டங்களில் கூலி வேலைக்காக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் செல்வது வழக்கம். அவ்வாறு சென்ற தேனி மாவட்டத் தொழிலாளர்களின் வாகனம் போடி மெட்டு மலைச்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் போடி அருகே உள்ள பண்ணைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த அபிநயா(16), ஆனந்தி(16), உமா(26), பரமேஸ்வரி(24), தனலட்சுமி(42), போதுமணி(38), போதுமணி(48), பஞ்சவர்ணம்(52), நூர்ஜகான்(48), சின்னத்தாய்(22) தோப்புபட்டியைச் சேர்ந்த பானு(27), பாப்பா(59), தனலட்சுமி(42), ராணி(42), தமிழ்செல்வி(30), பாப்பா(45), அழகுபிள்ளை(36), முந்தலை சேர்ந்த அன்னக்கிளி(68), போடியைச் சேர்ந்த மாரியம்மாள்(43), காமாயி(65), பிச்சைமணி(37), இவர்களுடன் வாகன ஓட்டுநர் முகேஷ்(25) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
மேலும் சம்பவ இடத்திலேயே பண்ணைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த கண்ணன்(40) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு முதற்கட்ட சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பண்ணைத்தோப்பு பதியைச் சேர்ந்த தனலட்சுமி, நூர்ஜகான், முந்தலையைச் சேர்ந்த அன்னக்கிளி ஆகியோர், மேலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.