ஓபிஎஸ்ஸின் கோட்டை வலுவிழக்கிறதா? ஈபிஎஸ்ஸை ஆதரித்த தேனி மாவட்ட அதிமுகவினர்! - அதிமுகவில் ஒற்றை தலைமை யாருக்கு
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறி சூடுபிடித்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியைச் சேர்ந்த அதிமுகவினர் சென்னையில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதிமுகவில் ஒற்றைத்தலைமையா? அல்லது இரட்டைத்தலைமையா? என உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ள சூழலில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களைச்சேர்ந்த அதிமுகவினர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களின் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திலேயே அவருக்கு எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது. தேனி மாவட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சென்னையில் எடப்பாடி பழனிசாமியை இன்று (ஜூன்19) நேரில் சந்தித்து தங்களின் ஆதரவினைத் தெரிவித்தனர்.
அந்த வகையில் கம்பம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுகவின் கழக அமைப்புச் செயலாளருமான ஜக்கையன், தேனி மாவட்ட அதிமுக பொருளாளர் சோலைராஜ், தேனி மாவட்ட முன்னாள் துணைச்செயலாளர் முருக்கோடை ராமர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றச்செயலாளர் செந்தட்டிகாளை,
தேனி நகரச் செயலாளர் கிருஷ்ண குமார், பெரியகுளம் முன்னாள் ஒன்றியச் செயலாளர் அன்னபிரகாஷ், கம்பம் ஒன்றிய முன்னாள் செயலாளர் இளையநம்பி, பெரியகுளம் ஒன்றிய துணைச்செயலாளர் வைகைபாண்டி, ஆண்டிபட்டி-பேரூர் கழக துணைச் செயலாளர் பொன் முருகன் ஆகியோர் சென்னையில் இன்று எடப்பாடி பழனிசாமியை நேரில் அவரது வீட்டில் சந்தித்து தங்களின் ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் கோட்டையாக கருதப்படும் தேனி மாவட்டத்தில் முக்கிய அதிமுக நிர்வாகிகளே ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக திரும்பியதோடு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த சம்பவம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இது தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்ட அதிமுகவினரே ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக திரும்பியுள்ள சம்பவம் எடப்பாடி பழனிசாமியா (அ) ஓ.பன்னீர்செல்வமா என்ற போட்டியில், எடப்பாடியின் கை ஓங்கி இருப்பதையே காட்டுவதாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


இதையும் படிங்க: 'அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க' என கோஷமிட்ட காஞ்சி மாவட்ட அதிமுகவினர்