தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் போடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அரண்மனைப்புதூர் ஊராட்சியில், திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அப்போது, கூட்டத்திலிருந்த பெண்களிடம் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். இதில், பூதிப்புரம் பேரூராட்சியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் பேசுகையில், "வீட்டில் முறுக்கு தயார் செய்து பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்து வருகிறோம்.
கரோனா காலத்தில் வியாபாரம் இல்லாமல் தொழில் முடங்கியது. ஆனால், கரோனா காலத்தில் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்கள் கட்சியினருக்கு மட்டும் அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
மேலும் குண்டும் குழியுமாக இருந்த எங்கள் ஊர் சாலையை தரகு தொகைப் பெற்றுக்கொண்டு தரமற்றதாக அமைத்ததால், சிறுது காலத்திலேயே அந்த சாலை தகர்ந்துவிட்டது. எங்கள் தொகுதியில் வெற்றி பெற்றவர் ஓபிஎஸ். ஆனால், எங்களுக்கு எந்தவொரு திட்டங்களளையும் செய்யாமல், அவர் மட்டும் சொத்துகள் வாங்கி குவித்துள்ளார்.
அவர் மீது எங்கள் பகுதி மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர். ஓபிஎஸ் மட்டும் எங்கள் தொகுதி பக்கம் வந்தால் என் உயிரே போனாலும், அவரை கொல்லாமல் விட மாட்டேன் என்று கொதித்து பேசினார். இதையடுத்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், "ஓபிஎஸ் மீது நீங்கள் எவ்வளவு வெறுப்பு, கோபத்தில் இருக்கிறீர்கள் எனத் தெரிகிறது.
இன்னும் நான்கு மாதங்களில் ஓட்டு போட்டு அவரை காலி செய்து விடுவீர்கள். ஆனால், ஜனநாயக மரபுப்படி நீங்கள் பேசிய வார்த்தை தவறானது. அந்த வார்த்தையை திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தினார். அதற்கு பதிலளித்த லட்சுமி உங்களுக்காக வேண்டும் என்றால் எனது கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அவருக்காக அல்ல என்றார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு வில்லன்- தேனியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு