தேனி: போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட தமிழ் இணையவழிக் கல்வி கழகத்தின் சார்பாகவும் ‘மாபெரும் தமிழ் கனவு’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் இன்று (செப்.2) நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவ மாணவியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினரும் பத்மஸ்ரீ விருது பெற்ற திருநங்கையுமான நர்த்தகி நடராஜ் (Transgender Narthaki Nataraj is a Padma Shri awardee) சிறப்பு விருந்திநராக பங்கேற்று, பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த அரசுத்துறை மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருள்களின் கண்காட்சியை நேரில் பார்வையிட்டார்.
இதையும் படிங்க: ஐந்து ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்; முடிவுக்கு வந்த பெண்ணின் போராட்டம்!
அதன் பின்னர், 'தென்மேற்குப் பருவக்காற்று தீந்தமிழ் வீச்சும்' என்ற தலைப்பில் தமிழ் மற்றும் தமிழின் பெருமை குறித்தும் கல்லூரி மாணவ மாணவிகளிடையே அவர் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் கேட்ட கேள்விகளுக்கு நர்த்தகி நடராஜ் பதில் அளித்தார். மேலும், தான் கடந்து வந்தபாதையில் தன்னுடைய வளர்ச்சிக்கு தமிழும், தமிழ் மரபும், தமிழ் கலையும்தான் காரணம் என்று அவர் பெருமிதம் கூறினார்.
'திருநங்கை' என்று தன்னை ஒதுக்கி வைத்து அவதூறு பேசியவர்களுக்கு முன்பு, தன்னை தேசிய அளவில் மூன்று முறை விருதுகள் பெற்ற திருநங்கையாக உயர்த்தி பெருமை சேர்த்தது, தமிழ் மொழியும், தன்னுடைய தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும்தான் என்று கூறினார். ஜனாதிபதி மாளிகையில் அந்த பாராட்டு ஒளியில் மூன்று முறை தேசிய விருதுகளுக்காக நின்ற ஒரே திருநங்கை என்று கூறினார். அத்தகைய பெருமையை தனக்கு தந்தது, நம் தாய் மொழியான தமிழும் தமிழ் கலைகளும் மரபுகளும்தான் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: One Nation One Election: ‘ஒரே நாடு, ஒரே தேர்தலை வரவேற்கிறோம்’ - ஓபிஎஸ்
பின்னர், மாபெரும் தமிழ் கனவு என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் நினைவு பரிசுகளும் வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்டத்தைச் சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: தென்காசியில் இருந்து சூரியனுக்கு புகழை எடுத்து சென்ற பெண் விஞ்ஞானி.. பெருமிதத்தில் சகோதரர்!