முல்லைப்பெரியாறு அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்கிறது. கேரள மாநிலம் இடுக்கியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை பல்வேறு சட்ட போராட்டங்களுக்குப் பிறகு 142அடியாக உயர்த்திக் கொள்ள, கடந்த 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் அணையைக் கண்காணித்துப் பராமரிக்க மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவையும் அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மூவர் குழுவில் தலைவராக, தற்போது மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார்.
தமிழ்நாடு பிரதிநிதியாகப் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் கே.மணிவாசன், கேரள அரசு சார்பில் அம்மாநில நீர் வள ஆதார கூடுதல் செயலர் டி.கே.ஜோஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நடப்பாண்டு(2020) ஜனவரி 28ஆம் தேதி ஆய்வு செய்த இக்குழுவினர் ஓராண்டுக்குப் பிறகு இன்று (பிப்.19) அணையில் ஆய்வு செய்தனர்.
பருவ மழைகள் முடிவடைந்து விரைவில் கோடை காலம் தொடங்கவுள்ளதால், அணையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மூவர் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் தமிழ்நாடு பிரதிநிதியான பொதுப் பணித்துறை அரசு முதன்மை செயலாளர் கே.மணிவாசன் பங்கேற்கவில்லை.
ஆய்விற்கு வந்த மூவர், குழுத் தலைவர் குல்சன்ராஜ் தலைமையிலான தமிழ்நாடு அலுவலர்கள், தேக்கடி படகுத்துறையில் இருந்து தமிழ்நாட்டு அரசுக்குச் சொந்தமான கண்ணகி படகிலும், கேரள பிரதிநிதிகள் அம்மாநிலத்தின் வனஜ்யோஸ்தனா படகிலும் தனித்தனியாக பயணம் செய்தனர்.
இதில் முல்லைப்பெரியாறு பிரதான அணை, பேபி அணை, மதகுப்பகுதி, கேலரிப்பகுதி, கசிவு நீர் ( சீப்பேஜ் வாட்டர்) உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். மேலும் அணையின் 3,4ஆவது மதகுகளை (ஆர்3, வி1) இயக்கி பார்த்தனர். இதனைத் தொடர்ந்து தேக்கடியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மூவர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடத்திய பிறகு, ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க உள்ளனர்.
இன்று (பிப்ரவரி 19) காலை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 128.80அடியாக உள்ளது. அணையின் நீர்இருப்பு 4,439மி.கன அடியாகவும், நீர் வரத்து 109கன அடியாகவும் இருக்கிறது. அணையில் இருந்து தமிழ்நாட்டு பகுதிகளுக்கு விநாடிக்கு 600கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு முல்லைப்பெரியாறு அணையில் கடந்த மாதம் முதல் தரை வழியாக மின்சாரம் விநியோகம் செய்வதற்கு கேரள அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அணையின் பிரதான கோரிக்கையான பேபி அணையை பலப்படுத்தி நீர்மட்டத்தை 152அடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மூவர் குழு வாயிலாக எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் தமிழ்நாட்டு விவசாயிகள் உள்ளனர்.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு மீண்டும் தண்ணீர் திறப்பு