குன்னூரைச் சேர்ந்த முனியாண்டி (57) என்பவர், தன்னிடம் பணமோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால், கடந்த பிப்.14-ம் தேதி ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
இதனையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பிப்.15-ம் தேதி உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் மனுக்களுடன் வந்தனர். அப்போது, நுழைவு வாயிலில் இருந்த காவல் துறையினர் பொதுமக்களின் பைகளில் பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள்கள் இருக்கிறதா? என்றும், பொதுமக்கள் குடிநீருக்காகக் கொண்டுவந்த பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்து பார்த்து தீவிர பரிசோதனை செய்தபிறகே, அலுவலக வளாகத்திற்குள் அனுமதித்தனர்.
இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.