அமமுகவில் இருந்து பிரிந்து திமுகவில் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்கள் இணைப்பு விழா இன்று தேனியில் நடைபெறவுள்ளது. தேனி அருகே உள்ள வீரபாண்டியில் நடைபெறும் இந்த இணைப்பு விழாவில் அமமுக, அதிமுக ஆகிய கட்சிகளிலிருந்து பிரிந்தவர்கள், தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்கள் பலர் திமுகவில் இணைய உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து திமுகவின் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்றிரவு தேனிக்கு வந்தார். தேனியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள அவர், இன்று காலை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்.ஆர். அழகர்ராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.
வயோதிகம் காரணமாக உடல் நலம் குன்றியுள்ள அவரின் ஆரோக்கியம் குறித்து அழகர்ராஜாவின் குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் கடந்த 1996 - 2001 வரை தேனி சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர் என்.ஆர். அழகர்ராஜா.
இந்தச் சந்திப்பின் போது, சட்டப்பேரவை உறுப்பினராக தான் பதவி வகித்த காலத்தில் சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியுடனான சந்திப்பு குறித்த நினைவுகளை ஸ்டாலினிடம் அவர் பகிர்ந்துகொண்டார். மேலும் சட்டப்பேரவையில் தான் எழுப்பிய கேள்விகள், அதற்கு அளிக்கப்பட்ட பதில்கள் குறித்த புத்தகத்தையும் அவர் வழங்கினார்.