தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதியில் வடிகால் வசதிக்காக சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில், அரசமரம் பகுதியில் நடைபெற்று பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தால் கடந்த சில தினங்களுக்கு முன், லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து பண்ணைப்புரம், கோம்பை, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்கின்ற குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, குடிநீர் குழாய் பழுது பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பழுது பார்க்கப்பட்ட குழாயில் திடீரென ஏற்பட்ட அழுத்தம் காரணமாக தண்ணீர் சுமார் 20 அடி உயரத்திற்குப் பீய்ச்சி அடிக்க தொடங்கியது. இதனை எதிர்பார்க்காத மக்கள், அங்கிருந்து தெறித்து ஓடினர். மேலும், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தகவலறிந்து விரைந்து வந்த குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள், குழாயை உடனடியாக சரி செய்தனர். தற்போது, இதன் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்